'ஆபாச படம் பார்த்தீர்கள்' என மிரட்டல்: 2 வாலிபர்கள் செய்த மோசமான செயல்

 செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல பேசி பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். 

அந்த மர்ம நபர், தான் பீளமேடு எஸ்பி., அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து அந்த மர்ம நபர், ஜெகதீசனிடம் நீங்கள் செல்போனில் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள், அதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றுள்ளார். மேலும், அந்த மர்ம நபர், உங்களை கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார்.

அப்போது ஜெகதீசன், தான் எந்த படமும் பார்க்கவில்லை என்றுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர், உங்களை கைது செய்யாமல் விடவேண்டுமானால் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். 

இதனால், பயந்து போன ஜெகதீசனும் தான் பணம் தருவதாக கூறி, மர்ம நபர் தெரிவித்த செல்போன் எண்ணுக்கு ஜிபே மூலம் ரூ.38 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். சிறிது நாட்கள் கழித்து ஜெகதீசன் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

 அப்போது அவர், பணத்தை பெற்றது மோசடி கும்பல் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் அல்லது அரசு அதிகாரி எனக் கூறி தொலைபேசியில் மிரட்டி பணம் கேட்பது பொதுவாக சைபர் மோசடியின் ஒரு முறையாகும். எந்த சூழலிலும் பயந்து உடனடியாக பணம் அனுப்ப வேண்டாம். அழைப்பின் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ வழிகளில் உறுதிப்படுத்தி, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டும். உங்கள் வங்கி விவரங்கள், OTP, UPI PIN போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.