ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், தெஹ்ரானுடன் இனி பேச்சு நடத்த விரும்பவில்லை என்றும் அவர்களுடன் இனி பேச்சு நடத்துவது 'நேர விரயம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுகிறது. அவர்கள் பொய்யர்கள். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து டொனால்ட் டரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சு நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
