அந்தியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெருமாபாளையும், கொம்பு தூக்கி அம்மன் கோவில் கரும்பாறை தோட்டம் பகுதியை சேர்ந்த கருப்பணன் மனைவி பழனியம்மாள் (85). கணவரை இழந்த அவர் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளனர்.
இவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், மயக்கமடைந்த மூதாட்டி நேற்று காலை அருகில் இருந்த தோட்டத்துக்காரர்களிடம் தனக்கு நேர்ந்ததை கூறினார். இதனால், அதிச்சியடைந்த அவர்கள் மூதாட்டியின் மகன், மகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், மூதாட்டியின் தோட்டத்துக்கு அருகில் தனபால் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை செய்யும் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மேற்கு பிரிவை சேர்ந்த விஜய் (31), என்பவர் பலாத்காரம் செய்தது தெரிந்தது. அந்தியூர் பேருந்து நிலையத்தில் பதுங்கி இருந்த விஜய்யை போலீசார் கைது செய்தனர்.
