தொழில்நுட்பம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை ஒன்றாக இணைத்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் மனிதர்களுக்கே உரிய ஒரு உணர்வான முத்தத்தையும் தொலைதூரத்தில் உணரச் செய்ய முடியுமா? என்று முயற்சி செய்துள்ளனர்.
இதற்காக Kissenger (Kiss Messenger) என்ற கருவி உருவாக்கப்பட்டது.
நீண்ட தூரத்தில் இருக்கும் காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக உணர உதவுவதே இதன் நோக்கம்.
இந்தச் சிறிய கருவியை ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும். இதில் மென்மையான, அழுத்தத்தை உணரும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஒருவர் அந்தக் கருவியில் முத்தமிடும்போது, அந்த முத்தத்தின் அசைவு மற்றும் அழுத்தத்தின் அளவை சென்சார்கள் பதிவு செய்யும்.
பின்னர் அந்தத் தகவல் உடனடியாக மற்றொரு Kissenger கருவிக்கு அனுப்பப்படும். அதை வைத்திருக்கும் நபர், அதே நேரத்தில் அந்த முத்தத்தின் உணர்வைத் தனது கருவியில் உணர முடியும். இது வெறும் அறிவியல் கற்பனை அல்ல.
மனிதர்களுக்கிடையேயான உறவில் தொட்டு உணரும் உணர்வு (Physical Touch) முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராயும் ஒரு உண்மையான தொழில்நுட்ப முயற்சியாக இது உருவாக்கப்பட்டது.
குறுஞ்செய்தி, குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பைத் தாண்டி, தொடுதல் மூலம் உணர்வுகளைப் பகிர முடியுமா? என்பதற்கான ஒரு முயற்சியாக Kissenger இருந்தது.
இந்தக் கருவி பொதுமக்கள் பயன்படுத்தும் பிரபலமான தயாரிப்பாக மாறவில்லை என்றாலும், உறவுகளின் எதிர்காலம், மெய்நிகர் நெருக்கம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பிரதிபலிக்க முடியும் என்பது குறித்து உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் டிஜிட்டல் உலகத்திலும் சில நேரங்களில்...“நான் உன்னை மிஸ் செய்கிறேன்” என்று கேட்பது மட்டும் போதாது...அந்த உணர்வை உணர வேண்டும்.
