வசமாக சிக்கிய பெண்; பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில், தீயணைப்புப் படையினரால் மீட்புப் பணிய மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சவுத் மார்ச் ஹைலேண்ட்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 'ரெபெக்கா குளத்தில்' 27 வயதுப் பெண் ஒருவர் சேற்றில் சிக்கியுள்ளார் என  பிற்பகல் 3 மணியளவில் ஒட்டாவா தீயணைப்புத் துறைக்கு 911 அவசர அழைப்பு வந்தது.

பிளாஸ்டிக் வடிகால் குழாய் மீது நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தனது மகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்துவிட்டார் என அவரது  தந்தை தீயணைப்புத் துறையினரிடம் தெரிவித்தார்.

சேற்றில் இடுப்பளவு மூழ்கிய அந்தப் பெண், நகர முயன்ற ஒவ்வொரு முறையும் மேலும் ஆழமாகச் மூழ்கத் தொடங்கினார்.

அவசர அழைப்பு விடுத்த தந்தையின் கைபேசி ஜி.பி.எஸ் தகவலைப் பயன்படுத்தி, தீயணைப்புப் படையினர் அப்பெண் இருக்கும் இடத்தை விரைவாகக் கண்டறிந்தனர்.

வனப்பகுதியின் நுழைவாயிலில் தந்தையைச் சந்தித்த வீரர்கள், அவரோடு சென்று அப்பெண் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

அப்பெண்ணின் இடது கால் இடுப்பு வரை சேற்றில் பலமாகச் சிக்கியிருந்ததை உறுதிசெய்த தீயணைப்பு வீரர்கள், 'பைக் போல்' என்ற கருவியைப் பயன்படுத்தி அவரைச் சீராகப் பிடித்துக்கொண்டு, காலைச் சுற்றியிருந்த சேற்றைக் கவனமாகத் தோண்டி எடுத்து அவரை வெளியே மீட்டனர்.

அவசர அழைப்பு வந்த 15 நிமிடங்களுக்குள் அந்தப் பெண் சேற்றிலிருந்து மீட்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.