கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் 'கேட்' அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.
இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், நோயாளர்காவுவண்டி சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிய உரிமையாளரின் அலட்சியமே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தீர்ப்பாய உறுப்பினர் ஜெப்ரி ட்ரோஸ்டியாக் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண் கோரிய சில தொகைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், நோயாளர்காவுவண்டி சேவைக்காக 848 டொலர்கள் மற்றும் மன உளைச்சலுக்காக 150 டொலர்கள் உட்பட, தீர்ப்பாயக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 1,139 டொலர்களை வழங்குமாறு நாய் உரிமையாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
