திடீரென தாக்கிய புயல்; இருளில் மூழ்கிய பல்லாயிரக்கணக்கான வீடுகள்!

டொராண்டோ மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதி  முழுவதும்  மிகவும் ஆபத்தான கடும் இடியுடன் கூடிய புயல் தாக்கியதால், கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பரவலான வெள்ளப்பெருக்கு, மின் தடை, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகின.

புயல் மிக வேகமாக தாக்கியதால் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பல வாகன ஓட்டுநர்களை, தண்ணீரில் மூழ்கிய வாகனங்களிலிருந்து மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.

பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள் விழுந்தமையுடன், ஏராளமான மரங்களும் சாய்ந்தன. மேலும், சில கட்டடங்களின் கூரைகளும் காற்றில் பறந்தன.

புயலின் தீவிரம் காரணமாக மக்களின் கையடக்கத்தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வழியாக அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டு, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தெற்கு ஒன்டாரியோவின் பல பகுதிகளிலும் இந்த இடியுடன் கூடிய புயல் வீசியதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் கனடா பல்வேறு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டது. குறிப்பாக, சில பகுதிகளுக்கு சிவப்பு நிற சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.