10 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட 10 பேர் கைது!

 


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 10 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட 10 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துப் ஆனந்த விஜேபால பின்வருமாறு விளக்கமளித்தார். 

2006 முதல் 2010 வரையான காலப்பகுதியில், சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முழுமையான அறிவுறுத்தல் மற்றும் அனுசரணையுடன் இந்தக் குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமும் இதில் அடங்கும்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில், குறித்த கொலை மற்றும் மேலும் 9 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிள்ளையான் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தக் குற்றச் செயல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதற்கு வெளிநாட்டில் இருந்து செயற்பட்ட ராசிக் மொஹமட் பாயிஸ் எனும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகச் சர்வதேச காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.