உலகளவில் கடந்த ஆண்டு சுமார் 47,000 பெண்களும் சிறுமிகளும் தமது துணைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் திட்டமிட்டு உயிரிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC) மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு (UN Women) இணைந்து வெளியிட்டுள்ள தரவுகளிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பதிவான சுமார் 78,000 பெண்கள் மீதான திட்டமிட்ட உயிரிழப்புச் சம்பவங்களில், 60 சதவீதமானவை அவர்களின் துணைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, சராசரியாக ஒவ்வொரு மணித்தியாலமும் ஐந்து பெண்கள் அல்லது சிறுமிகள் இவ்வாறு உயிரிழப்பதாகவும், நாளொன்றுக்கு 129 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 50,000 ஆக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு 47,000 ஆகக் குறைந்துள்ளது.
எனினும், இந்த மாற்றம் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் விளைவாகும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உண்மையில் குறைந்துள்ளன என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வகையான உயிரிழப்புகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பதிவாகியுள்ளதுடன், அதிக பாதிப்புக்குள்ளான கண்டமாக ஆபிரிக்கா காணப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு இலட்சம் பெண்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு வீதம் ஆபிரிக்காவில் 2.9 ஆகவும், அமெரிக்கக் கண்டத்தில் 1.4 ஆகவும், ஓசியானியாவில் 1.1 ஆகவும், ஆசியாவில் 0.6 ஆகவும், ஐரோப்பாவில் 0.5 ஆகவும் பதிவாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாக இடம்பெறுவதில்லை என்றும், நீண்டகாலமாகத் தொடரும் வன்முறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களின் இறுதிக்கட்டமாகவே இத்தகைய உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் ஐ.நா. பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பல பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து முறைப்பாடு செய்யத் தயங்குவதாகவும், சிலர் உரிய பாதுகாப்பைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளவில் பொதுவான கொலைச் சம்பவங்களின் வீதம் குறைந்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட உயிரிழப்புகளின் வீதம் அதைவிட மெதுவாகவே குறைந்து வருவதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
