மரணத்திலும் பலருக்கு மறுவாழ்வளித்த 19 வயது இளைஞன்!

 


வீதி விபத்திற்குப் பின்னர் மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, பல நோயாளர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.


வெயாங்கொடையைச் சேர்ந்த இந்த 19 வயது இளைஞர், வீதி விபத்தில் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றைத் தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் கூறியுள்ளார்.


சிறப்பு மருத்துவக் குழுவினரால் உறுப்புகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை விமானப் படையின் உதவியுடன் அவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


இளைஞரின் இதயம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது நோயாளி ஒருவருக்குப் பொருத்துவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.


மரணத்திலும் மற்றவர்களுக்கு வாழ்வளித்த தனது மகன் குறித்துப் பேசிய துயரத்தில் ஆழ்ந்திருந்த தந்தை, 'உன்னால் இன்று பலர் வாழப் போகிறார்கள்; என் அன்பான மகனே, எங்களை விட்டுப் பிரிவதற்கு முன்பே மற்றவர்களுக்கு நீ உயிர் கொடுத்துவிட்டாய். உனது தாய், நான், உனது அண்ணன் மற்றும் உனது சின்னத் தங்கை என நால்வரும் உன்னை இழந்து இந்த வீட்டில் எப்படிக் கழிக்கப் போகிறோம்?' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


மருத்துவக் குழுக்கள், இலங்கை விமானப் படை மற்றும் இளைஞரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் இந்த உறுப்பு தானம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.