கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களைப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய, தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட 6 விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2 முகாமையாளர்கள் உட்பட 20 பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம், இரத்தினபுரி, காலி, பிபிலை, களுத்துறை மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் ஆலோசனைக்கமைய, புதுக்கடை இலக்கம் 4 நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை உத்தரவின் அடிப்படையில் இந்த 6 நிலையங்களும் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன.
இதன்போது, பணத்திற்காக விற்பனை செய்யப்படுவதற்காக காத்திருந்த 18 பெண்கள் குறித்த நிலையங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 2 நிலையங்களின் முகாமையாளர்களாக செயற்பட்ட 2 பெண்கள் உட்பட மொத்தமாக 20 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத தகாத நிலையமொன்றை நடத்திச் செல்வதாயின் அங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டும்.
எனினும், முற்றுகையிடப்பட்ட எந்தவொரு நிலையத்திலும் வைத்தியர்கள் எவரும் இருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 5,000 முதல் 8,000 ரூபா வரையான பணத்தை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் தொழில் புரிவதாக தமது வீடுகளில் கூறிவிட்டு கொழும்புக்கு வருகை தந்து, வாடகை வீடுகளில் தங்கியிருந்து நீண்டகாலமாக இவர்கள் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
