சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 43 பேரின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, குறித்த நபர்களில் 17 பேர் துபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும் தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது பேர் வெவ்வேறு நாடுகளில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றச் சந்தேகநபர்கள் தொடர்பில் 233 சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் 92 நீல அறிவித்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 72 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
