கிண்ணியா பிரதேசத்தில் 436 மாணவர்கள் பல்வேறு குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே. புஷ்பகுமார் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று (25.11.2026) கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 436 மாணவர்களும் எவ்விதத் தவறும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள். குடும்பச் சூழ்நிலைகளே இவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியுள்ளன. பெற்றோர் இருவரும் அல்லது ஒருவரும் உயிரிழந்தமை, தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்ற பின்னர் மற்றையவர் மறுமணம் செய்துகொண்டமை போன்ற பல்வேறு காரணங்களால் இம்மாணவர்கள் போதிய பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாணவர்களைப் பாதுகாப்பான சூழலுக்குள் கொண்டுவருவதற்காக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் சரோஜா வேலைத்திட்டமும் முக்கியமானதாகும்.இவ்வாறான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்துவதற்கு 29 பிரதேச மக்கள் பாதுகாப்புக் குழுக்களும் உரிய செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும்.
அதேவேளை, கிண்ணியா பொலிஸ் பிரிவு திருகோணமலை மாவட்டத்திலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட பொலிஸ் பிரிவுகளில் ஒன்றாகும்.
இப்பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு கல்வி அலுவலகத்துடன் இணைந்து விசேட திட்டமொன்றைத் தயாரித்து வருகின்றோம். இதற்காக பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தொடர்பான முழுமையான தரவுகளை மக்கள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அறிந்திருப்பது அவசியமாகும். போதைப்பொருள் ஒழிப்பு என்பது பொலிஸாரின் பொறுப்பு மாத்திரமல்ல.
பெற்றோர்களும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் அதில் தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.
