வருமான வரி அறிக்கைத் தாக்கல் செய்வது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீடித்துள்ளது.
திணைக்களத்தின் இணையவழி வரித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய போதிலும், டிசம்பர் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் வரி செலுத்துவோருக்கு எவ்வித தண்டப்பணமும் விதிக்கப்படமாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதல் தடவையாக வருமான வரிப் பதிவைப் பெற்று அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், நவம்பர் மாதத்தில் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையில் அதிக அழுத்தம் ஏற்பட்டது.
இதன் காரணமாகக் கட்டமைப்பில் நெரிசல் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டு, பல வரி செலுத்துவோரும் அவர்களின் பிரதிநிதிகளும் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு 2026 டிசம்பர் 14 ஆம் திகதி வரை இந்தச் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பவர்களுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் XVIIA மற்றும் XVIII ஆகிய அத்தியாயங்களின் கீழ் எவ்வித தண்டப்பணமோ, தவணை தவறிய மதிப்பீடுகளோ அல்லது சட்ட நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படமாட்டாது எனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்கால ஆண்டுகளில் இறுதித் திகதிக்கு முன்னதாகவே வரித் தாக்கல் செய்வதற்கான வசதிகள் வழங்கப்படுவதால், கூடிய விரைவில் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு திணைக்களம் வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து வரி செலுத்துவோரும் நீடிக்கப்பட்ட இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தித் தமது வருமான வரி அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
