O/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு! பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!

 


எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை முன்னிட்டு, டிசம்பர் 02 ஆம் திகதி முதல் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் (டியூஷன்) நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 


இன்றைய தினம் பத்தரமுல்லயில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இதற்கமைய, டிசம்பர் 02 ஆம் திகதி முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துதல், வழிநடத்துதல், மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் ஆகிய செயற்பாடுகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், பரீட்சார்த்திகள் அனைவரும் தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்களை மிகவும் கவனமாகப் பரிசோதித்துப் பார்க்குமாறும், அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் பெயர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருப்பின் அவற்றை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டைகளில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின், நேரடியாகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து அவற்றைச் சரிசெய்து கொள்ளுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.