கனடாவில் சிறைச்சாலையில் ஒன்றில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சாதாரண திருமண சடங்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ரேச்சல் மற்றும் ஆஷ்லி குயின் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மிகவும் வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ளனர்.
கனடாவின் செயின்ட் ஜான் நகரைச் சேர்ந்த இந்த ஜோடி, கடந்த சனிக்கிழமையன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னாள் சிறைச்சாலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த புதுமையான திருமண கொண்டாட்டம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த தம்பதியினரின் அசாதாரண திருமணமானது டார்செஸ்டர் ஜெயிலில் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.
1875 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த டார்செஸ்டர் சிறைச்சாலை (Dorchester Jail) பல ஆண்டுகளுக்கு முன்பே சிறைச்சாலை என்ற தனது அடையாளத்தை இழந்துவிட்டது.
இருப்பினும், அதன் கடந்த காலத்தின் சுவடுகள் இன்னும் அழியாமல் உள்ளன. நியூ பிரன்சுவிக்கின் வரலாற்றில் இந்த கட்டடத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.
1936 ஆம் ஆண்டு மாகாணத்தின் கடைசி இரட்டை தூக்கு தண்டனை இங்குள்ள மரண தண்டனை அறையில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியை கொண்ட இந்த இடத்தில், முந்தைய காலத்தில் 30 கைதிகள் வரை அடைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண அறையை திருமண அலங்கார மண்டபமாக மாற்றி தம்பதியினர் கரம் கோர்த்துக் கொண்டனர்.
இந்த திருமணம் தொடர்பாக ரேச்சல் வழங்கிய தகவலில், "நாங்கள் வழக்கமான திருமணங்களில் இருந்து விலகி, முற்றிலும் தனித்துவமான திருமண அனுபவத்தை உருவாக்க விரும்பினோம்," என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "எனக்கு பழமையான கட்டடங்கள் மற்றும் அவற்றின் வரலாறு மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு" என்றும் தெரிவித்தார்.