முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் 10 சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவர மண்டிய, கிரிபத்கொட, கிரில்லவல, நீர்கொழும்பு, கம்பஹா, களனி, வத்தளை உள்ளிட்ட 10 பகுதிகள் இவ்வாறு சுற்றிவளைத்து சோதனையிடப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன ரணவீரவை தேடுவதற்காக பல்வேறு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20 இடங்களில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், அவர் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் கைது செய்யப்படவில்லை. பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் இஷாரா செவ்வந்தி காணாமல் போயுள்ளார், மேலும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.