தமிழகத்தின் கரூர் மாவட்டம், செம்மடை நாவல் நகர் அருகே சேலம்-கரூர் நெடுஞ்சாலையில் இன்று (17) காலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு சேலம் வழியாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியது.இதனைத் தொடர்ந்து, வீதியின் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுற்றுலா வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் சுற்றுலா வாகனத்தில் பயணித்த சிறுமி, சிறுவன் மற்றும் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆம்னி பேருந்து பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது என்பதும், சுற்றுலா வாகனம் கோவில்பட்டியிலிருந்து வந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.