இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18 ஆம் திகதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.
முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.
விபத்துக்குப் பிறகு, சிங்கையாவை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள், சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.