வௌ்ளவத்தையில் வாழும் நடுத்தர குடும்பத்தின் தலைவி, புதன்கிழமை (25) அதிகாலையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கேஸ் சுவாலை மஞ்சளாகி சுவாலையை இழுத்துக்கொண்டது. குடும்பத்தலைவன் வெளிநாட்டில் தொழில் செய்கிறார். பிள்ளைகள் இருவரும் உயர்கல்வி பயிலுகின்றனர்.
என்ன செய்வதென தெரியாத அந்த குடும்பத்தலைவி, சிற்றுண்டி சாலையில் பகலுணவை வாங்கிக்கொள்ளலாம் என தீர்மானித்து, அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.
எனினும், மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்லும் முன்னர், தொலைபேசியில் ஓடர் செய்து, கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டில் தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர்.
தொலைபேசி அழைப்புக்கு மேல் அழைப்புகளை எடுத்து ஒருவாறாக சமையல் எரிவாயு சிலிண்டரை வீட்டுக்கு எடுப்பித்து விட்டாள்.
அது ஒரு முகவர் நிறுவனம் என்பதால், சிலிண்டரை தூங்கிக் கொண்டு வந்தவர், தரகு பணத்தையும் சேர்த்து, 4,800 ரூபாய் எனக் கூறியுள்ளார்.
எனினும், வீட்டிலிருந்த மகள்மார் மாற்றிய பணம் இன்மையால் 5000 ரூபாய் தாளை கொடுத்துள்ளனர்.
மாற்றி தருவதாக வாங்கியவர், அந்த வீட்டு பக்கமே, பல மணி நேரமாக திரும்பி வரவில்லை. அவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு பல அழைப்புகளை எடுத்தாலும் பதிலளிப்பதே இல்லை.
எனினும், 200 ரூபாய் தான் என கைவிடாத அந்த குடும்பத்தலைவி, உரிய சமையல் எரிவாயு முகவர், நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பை எடுத்து, தனக்கு நேர்ந்த மோசடியை கூறியுள்ளார்.
என்னிடம் மட்டுமல்ல, ஏனையோரிடமும் அந்த கேஸ் விநியோகிக்கும் நபர் ஏமாற்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் இவ்வாறு அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேஸ் விநியோகம் என்ற பெயரில் இணையத்தளங்களில் விளம்பர மிட்டு, விற்பனை செய்யும் முகவர் ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கேஸ் அண்ணனுக்கு அக்கா கொடுத்த கேஸால், முகவர்களும் நிறுவன பிரதிநிகளும் விழிப்பாகிவிட்டனர். மறுநாளான, வியாழக்கிழமை (26) காலையிலேயே அந்த பணம், வங்கிக்கணக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது.