இலங்கை விமானத்தை கடத்த போவதாக தகவல்-தேடி பிடித்த பொலிசார்-புலிகளின் தலைவரின் படங்களுடன் சிக்கிய நபர்..!

 இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடத்தப்படவுள்ளதாக தொலைபேசி மூலமாக தவறான தகவல் பரப்பி, அரசிற்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வௌ்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


குறித்த சந்தேகநபரிடமிருந்து Tab, ஐபோன், ரவுட்டர் மற்றும் பண பரிமாற்றங்களுக்கான வங்கி பற்றுச்சீட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த Tab சாதனத்திற்குள் விடுதலைப் புலிகள் தலைவரின் புகைப்படங்கள், கொடிகள், அரச தலைவர்களின் புகைப்படங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் நேற்று (11) நாள் முழுவதும் 119 அவசர அழைப்பு சேவை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு அழைத்து இந்தோனேசியாவிலிருந்து வரும் விமானத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பல குறியீட்டு எண்களைக் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விடயம் குறித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்த பின்னர், அத்தகைய அழைப்புகளை மேற்கொள்ளும் நபர் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிலிருந்து அழைப்புகளை மேற்கொள்வது தெரியவந்துள்ளது. 

பின்னர், வெள்ளவத்தை பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்ட நிலையில்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் கஹதவல மற்றும் உப பொலிஸ் பரிசோதகவர் ஹேஷான் குமார உள்ளிட்ட குழுவினர் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கோபுர அறிக்கைகள் மூலம் விரைவான விசாரணைகளை மேற்கொண்டனர். 

சந்தேகநபர் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் 33ஆவது ஒழுங்கை பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அதன்படி, மேலதிக விசாரணைகளின் போது, ​​சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று நாள் ஒன்றுக்கு மாத்திரம் 3,000 ரூபா செலுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த சந்தேக நபர் முன்னர் கொழும்பு 2 இல் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அந்த ஹோட்டலில் நாளொன்றுக்கு 5,000/= ரூபா செலுத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த நபர் வெளிநாடுகளில் இருந்து டொலர் பெறும் முறையையும் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது, மேலும் அவருக்கு யாழ்ப்பாண நீதிமன்றால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

சந்தேகநபர் 43 வயதுடைய முகத்துவாரம், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவராவார். 

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் கஹதவலவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேஷான் குமார உள்ளிட்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post