திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்த ரிதன்யா (27) என்ற இளம்பெண்ணின் தற்கொலை, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில், கணவர் கவின் குமார் (28), மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரால் உடல், மனரீதியாகவும், வரதட்சணைக் கொடுமையாலும் துன்புறுத்தப்பட்டு, பூச்சி மருந்து குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம், குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமியாரின் மனமாறாத மனோபாவம்
ரிதன்யா, தனது கணவரின் பாலியல் துன்புறுத்தல்களையும், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளையும் தனது மாமியார் சித்ராதேவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
ஒரு பெண்ணாக, மாமியார் தனது வேதனையைப் புரிந்து கொள்வார் என்று நம்பி, தனது குடும்பத்தில் இதை வெளிப்படுத்தினால் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும், இரு குடும்பங்களுக்கும் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில், மாமியாரிடம் ஆறுதல் தேடினார்.
ஆனால், சித்ராதேவி, ஒரு தாயாக மருமகளை அரவணைப்பதற்கு பதிலாக, தனது மகனை திருத்த முயற்சிக்காமல், ரிதன்யாவை மேலும் துன்புறுத்தியுள்ளார்.
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரையின் கண்ணீர் மல்கிய பேட்டியில், மாமியார் கூறிய வார்த்தைகள் இதயத்தை உலுக்கியுள்ளன. "நீங்கள் 500 பவுன் நகைகள் கொடுப்பதாக கூறினீர்கள், ஆனால் 300 பவுன் மட்டுமே வந்துள்ளது.
மீதி 200 பவுன் எங்கே?" என்று வரதட்சணை குறித்து கேள்வி எழுப்பியதுடன், ரிதன்யாவின் புலம்பல்களை கண்டுகொள்ளாமல், "எனது மகன் உன்னிடம் இன்னும் நிறைய உடலுறவு எதிர்பார்க்கிறான், அதை புரிந்து நடந்து கொள்" என்று கூறியது, ஒரு மாமியாராக அவரது மனமாறாத மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த வார்த்தைகள், ரிதன்யாவின் மனதை மேலும் உடைத்து, தற்கொலை முடிவுக்கு அவரை தள்ளியதாக கருதப்படுகிறது.