திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் கோமதி (38) தனது கணவர் ஸ்டீபன்ராஜால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோமதி தன்னைவிட வயதில் இளையவருடன் கள்ள உறவில் இருந்ததாகக் கூறப்படும் காரணத்தால், ஆத்திரமடைந்த ஸ்டீபன்ராஜ் இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றியதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பின்னர், ஸ்டீபன்ராஜ் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.முதற்கட்ட விசாரணையில், கோமதிக்கு நான்கு மகன்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து ஸ்டீபன்ராஜை கோமதி திருமணம் செய்திருந்தார். ஆனால், சமீபத்தில் வயதில் இளையவருடன் கோமதி கள்ள உறவில் ஈடுபட்டதாகவும், இதனை அறிந்த ஸ்டீபன்ராஜ் மனைவியை பலமுறை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, கோமதி தனது கள்ளக்காதலனுடன் சாலையோரம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஸ்டீபன்ராஜ், ஆத்திரத்தில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, கோமதியின் கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பியோட, ஸ்டீபன்ராஜ் கோமதியை கத்தியால் வெட்டினார். இதில் கோமதியின் ஒரு கை துண்டிக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.