தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான இளம்பெண்ணுடனான உறவால், இதய மருத்துவர் ஒருவரின் மனைவியான பல் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹனம்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இதய மருத்துவர் அல்லாடி சுருஜன் (32), 2017-ல் பல் மருத்துவர் பிரத்யூஷாவை (28) திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு வயது மற்றும் ஏழு மாதக் குழந்தைகள் உள்ளனர்.

சுருஜன், வாரங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்த மருத்துவமனையின் விளம்பரத்திற்காக, ‘புட்ட பொம்மா’ என்ற புனைப்பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஸ்ருதி என்ற இளம்பெண் வந்தபோது, சுருஜனுடன் பழகத் தொடங்கினார்.
ஸ்ருதியின் ரீல்ஸ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்ட சுருஜன், அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்து, அவரது வீடியோக்களை லைக் செய்து நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், ஸ்ருதியின் கோரிக்கையை ஏற்று, இதய அறுவை சிகிச்சையை நேரில் காட்ட, அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றார்.
இதை ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததால், மருத்துவரல்லாதவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்ததாக பரவலான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சுருஜனின் காரை ஸ்ருதி பயன்படுத்தி, அதையும் ரீல்ஸாக பதிவிட்டார். இதற்கிடையில், பிரத்யூஷா, கணவரின் இந்த உறவை அறிந்து, தனது மாமியார்-மாமனாரிடம் முறையிட்டார்.
ஆனால், அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. சுருஜன், ஸ்ருதியை திருமணம் செய்ய விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரத்யூஷா, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணவரிடம் கெஞ்சியும் பயனில்லை. ஜூலை 14, 2025 அன்று, பிரத்யூஷா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
அவரது தாயார் பத்மாவதி மருத்துவமனையில் சென்றபோது, பிரத்யூஷா ஏற்கனவே இறந்திருந்தார். இதையடுத்து, பிரத்யூஷாவின் குடும்பத்தினர், சுருஜனின் துன்புறுத்தல் மற்றும் ஸ்ருதியுடனான உறவால் அவர் தற்கொலை செய்ததாகவோ அல்லது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
ஹசன்பர்தி காவல்நிலையத்தில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சுருஜன், அவரது பெற்றோர் மதுசூதன், புண்யவதி மற்றும் ஸ்ருதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.