தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, திருட்டு, திருமணம் தாண்டிய உறவு என சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தோழி மீது கொண்ட அதீத காதல் மற்றும் தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த 5 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான கூலித் தொழிலாளி. இவர் அப்பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தொழிலாளியின் மனைவி ஆண் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து அக்டோபர் 4 ஆம் தேதி தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை மூச்சு பேச்சில்லாமல் மயங்கியுள்ளது. பால் குடித்தபோது மூச்சுத் திணறி குழந்தை மயங்கி இருக்கலாம் என்று நினைத்து உடனடியாக அவர்களது குடும்பத்தினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததால் கூலித் தொழிலாளி கடும் சோகத்தில் மூழ்கியுள்ளார். ஆனால், அவரது மனைவியோ குழந்தை உயிரிழந்த சோகம் சிறிதும் இல்லாமல் இருந்துள்ளார். அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த தொழிலாளி அவருடைய செல்போனை பார்த்துள்ளார்.
அவரது மனைவி பயன்படுத்தும் செல்போனுடன் மற்றொரு செல்போனும் இருந்துள்ளது. மனைவி இல்லாத நேரத்தில் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்தபோது அவரது மனைவியும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணும் தவறான உறவில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த குழந்தையின் புகைப்படத்தையும் அந்தப் பெண்ணுக்கு தனது மனைவி அனுப்பியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கூலித் தொழிலாளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தொழிலாளியின் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தோழியுடன் தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால் குழந்தையைக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், கூலித் தொழிலாளியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டு இளம்பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், உனக்கு ஆண் குழந்தை பிறந்ததும் என்னை மறந்துவிட்டாய் என இளம்பெண் கூறியுள்ளதால், தாயே பச்சிளம் குழந்தையை கொன்றதாகக் கூறியுள்ளார்.
அக்டோபர் 4 ஆம் தேதி தனது குழந்தைக்குப் பால் கொடுப்பதைப் போல கொடுத்து, மூக்கைப் பிடித்து அடைத்து கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, தொழிலாளியின் மனைவி, அவரது தோழியை காவல் துறையினர் கைது செய்தனர். தோழியுடனான தகாத உறவுக்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
