43,000 பேருக்கு 'அஸ்வெசும' பணம் இல்லை! 'அஸ்வெசும' (Aswesuma) நிவாரணத் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், வங்கிக் கணக்கு இல்லாத ஒரே காரணத்தினால் 43,703 பயனாளிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தமக்குரிய பணத்தைப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையிலேயே (Audit Report) இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபை செய்த தாமதம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லாத பட்சத்தில், அவர்களுக்குப் பணத்தைச் சேர்ப்பதற்கான உரிய பொறிமுறையொன்றை 2025 ஜூன் மாதம் வரை நலன்புரி நன்மைகள் சபை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறை கூறப்பட்டுள்ளது. இதனால் தகுதியான ஏழை மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய உதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள சபை அதிகாரிகள், "வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு, கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட ரீதியில் நாம் அறிவித்திருந்தோம்," என்று தெரிவித்துள்ளனர். எது எவ்வாறாயினும், அஸ்வெசும விதிகளின்படி தகுதியான அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வு திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
