மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி.! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று (03) மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த மோகனராசா லோயிதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக வயற்கரைக்கு சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் காட்டுயானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
