மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு நேற்று (03) காலை சமுகமளித்த ஜனாதிபதி அங்கு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அந்த வகையில் 33 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளதுடன் 27 நாட்களுக்கு தேவையான பெட்ரோலும் கையிருப்பில் உள்ளது. அத்துடன் 49 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும், 44 நாட்களுக்கு தேவையான மசகு எண்ணெயும் கையிருப்பில் உள்ளது” என தெரிவித்தார். இதேவேளை ஈரானின் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டாலும், இலங்கைக்கு உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மற்ற நாடுகள் போதிய அளவு எண்ணெய்யை உற்பத்தி செய்வதால், ஈரானின் இழப்பை ஈடுகட்ட முடியும் என குறிப்பிட்ட ரணில் ஈரான் எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினால், அது பாரிய சிக்கலாக மாறும் என எச்சரித்தார்.
