எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக... மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து பதுக்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில தரப்பினர் கேலன்கள் அல்லது கொள்கலன்களில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதால், அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க, எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மீன்பிடி கப்பல்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வீட்டு நோக்கங்கள் தவிர கேலன்கள், போத்தல்கள் அல்லது பிற பொருட்களில் எரிபொருட்களை மறு அறிவிப்பு வரும் வரை வழங்க வேண்டாம் என்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தேவையில்லாமல் எரிபொருட்களை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் மற்றும் எரிபொருள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான பிரச்சாரங்களை இடுகையிடுபவர்கள் மீது இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
