சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நழுவிப்போன தனது காதலனைத் தேடி, கடல் கடந்து அமெரிக்கா சென்ற 86 வயதில் பிரெஞ்சு மூதாட்டி மேரி-தெரெஸின் (Marie-Thérèse) வாழ்க்கைப் பயணம் கண்ணீரில் முடிந்துள்ளது.
1960களில் நேட்டோ தளத்தில் பணிபுரிந்த அமெரிக்க வீரர் பில்லியை காதலித்த அவர், காலம் பிரித்ததால் 1966-ல் பிரிந்து சென்றார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, இருவரும் தங்களது துணைகளை இழந்த நிலையில், 2010-ல் மீண்டும் இணைந்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். “
இவர்களது மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை; திருமணமான சில மாதங்களிலேயே பில்லி காலமானார். கணவரின் மறைவுக்குப் பிறகு அமெரிக்காவில் தனித்து விடப்பட்ட மேரி-தெரெஸ், தனது குடியுரிமைப் பணிகளை (Green Card) முடிக்கும் முன்பே பெரும் சிக்கலில் சிக்கினார்.
சொத்து தகராறு காரணமாக பில்லியின் மகனுக்கும் இவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், மேரி-தெரெஸ் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் (ICE) அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அலாபாமாவில் வைத்து கைது செய்யப்பட்டபோது, 86 வயதான இந்த மூதாட்டியின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு, ஒரு பயங்கரமான குற்றவாளியைப் போல அதிகாரிகள் நடத்தியதாக அவரது மகன் பிரெஞ்சு ஊடகங்களிடம் கதறியுள்ளார்.
தற்போது லூசியானாவில் உள்ள ஒரு நெரிசலான தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ள மேரி-தெரெஸின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இதய நோய் மற்றும் முதுகு வலியால் அவதிப்படும் அவர், 70 பேருடன் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். “அவர் ஒரு வீராங்கனை, ஆனால் இந்த சூழலில் அவர் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்” என அவரது மகன் ஐநா மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் உதவியை நாடியுள்ளார்.
