மது அருந்த பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்!


மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி பகுதியில், மது அருந்துவதற்குப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்த சம்பவம் நேற்று (17) மாலை பதிவாகியுள்ளது. 

சித்தாண்டி-04, பழைய சந்தை வீதி, வேலாயுதம் வீதியில் வசிக்கும் குமாரசாமி வசந்தா என்ற 39 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த வீட்டில், உயிரிழந்த பெண்ணும் அவரது 23 மற்றும் 22 வயதுடைய இரண்டு மகன்களும் வசித்து வந்துள்ளனர். 

குடிபோதை காரணமாக இந்த வீட்டில் தாய்க்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

மன உளைச்சலுக்கு ஆளான இளைய மகன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர், மூத்த மகன் தாயுடன் வசித்து வந்துள்ள நிலையில், அவர் மது அருந்துவதற்காகத் தாயிடம் அடிக்கடி பணம் கேட்டுச் சண்டையிட்டு வந்துள்ளார். 

நேற்றைய தினமும் மது அருந்துவதற்குப் பணம் கேட்ட நிலையில் ஏற்பட்ட தகராறில், மகனால் தாக்கப்பட்டே தாய் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் நடந்த சில நிமிடங்களில், உயிரிழந்த பெண்ணின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது தனது பேரன் வீதியில் கத்திக்கொண்டு செல்வதைக் கண்டுள்ளார். 

பின்னர் அயலவரிடம் கேட்டபோது தனது தாய் அடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, தனது மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

சந்திவெளி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

பின்னர் அயலவர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூத்த மகனைச் சந்திவெளி பொலிஸார் நேற்று இரவே கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post