காலி, தங்கேதர பகுதியில் நேற்று(12) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி - தடேல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி, தங்கேதர பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள், வீதியிலிருந்த நபர் மீது இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கேதர, டிக்சன் சந்தி பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாகக் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய காலி, தங்கேதர பகுதியைச் சேர்ந்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேற்படி நபர் வட்டிக்குப் பணம் வழங்குபவர் எனவும், நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபர் ஏற்கனவே தனக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
