கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தி, பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர் என பிரதி கல்வி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த அதிரடி புள்ளி விபரங்களை வெளியிட்டார்
பிரதி கல்வி அமைச்சர் நலின் ஹேவகே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த விரிவான புள்ளிவிபர விபரங்கள் வருமாறு,
2024 ஆம் ஆண்டில் 711 சிறுவர்களும் 2025 ஆம் ஆண்டில் 885 சிறுவர்களும் பாடசாலை செல்லாத சிறுவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 2024 இல் 570 சிறுவர்களும் (மாணவிகள் - 280, மாணவர்கள் - 290) 2025 இல் 777 சிறுவர்களும் (மாணவிகள் - 384, மாணவர்கள் - 393) புதிதாக பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 2024 இல் 28 சிறுவர்களுக்கும் (மாணவிகள் - 10, மாணவர்கள் - 18) 2025 இல் 34 சிறுவர்களுக்கும் (மாணவிகள் - 11, மாணவர்கள் - 23) கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
2024 இல் 597 மாணவர்களும் 2025 இல் 301 மாணவர்களும் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்.
இவ்வாறு இடைநடுவில் நின்றவர்களில் 2024 இல் 309 மாணவர்கள் 2025 இல் 210 மாணவர்களும் மீளவும் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2024 இல் 47 சிறுவர்களும் 2025 இல் 91 சிறுவர்களும் இதுவரை பாடசாலைகளில் சேர்க்கப்பட வில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இலவசக் கல்வித் துறைக்குள் மாணவர்கள் மத்தியில் நிலவும் இந்த இடைவிலகல் போக்கைக் கட்டுப்படுத்தவும், இதுவரை கல்வி வாய்ப்புகள் கிடைக்காத சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பாடசாலைக் கட்டமைப்புக்குள் உள்வாங்கவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
.jpeg)