இலங்கையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கும் அமர்த்துவது தொடர்பான சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பெருமளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் அமைச்சரவை வழங்கிய கொள்கை ரீதியான அனுமதிக்கு அமைய, தற்போது இந்த புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த குற்றங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை, இனி வரும் காலங்களில் ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போதைய காலத்திற்கு ஏற்ப இந்த அபராதத் தொகையை மாற்றியமைப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
இதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
