தமிழகத்தில் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனைக் கட்டுப்படுத்த முன்னர் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முழுமையான பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மதுபான விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுபான நிறுவனத்தின் புதிய இயக்குநராக நந்தகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த முறைகேடுகளை தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கூடுதல் விலை வசூலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
