அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவுகளை நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும'திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள சுமார் 700,000 முதியவர்களுக்காக அரசாங்கம் முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே முப்பத்தொன்பது இலட்சத்து பதினைந்தாயிரம் (3,493,915,000.00) ரூபாயை விடுவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபாயும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகுதியுடைய பயனாளிகள் அனைவரும் நாளை முதல் அவரவர் வங்கிக் கணக்குகள் ஊடாகத் தங்களது முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சபை மேலும் அறிவித்துள்ளது.
