செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள்: மொத்த எண்ணிக்கை 387 ஆக உயர்வு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 28ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் கண்டறியப்பட்டு, அவை முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு அவற்றுக்கான உத்தியோகபூர்வ இலக்கங்கள் இடப்பட்டன. அத்துடன், நேற்று சிறுவர் ஒருவருடைய என்புத் தொகுதி உட்பட 5 மனித என்புத் தொகுதிகள் புதைகுழியிலிருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் இதுவரை மொத்தமாக 387 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 367 மனித என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று தளம் இரண்டில் நடத்தப்பட்ட அகழ்வின் போது, உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்கள் உடல்களுடன் புதைக்கப்பட்ட சில முக்கிய சான்றுப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில சிறிய பாசி மணித் துண்டுகள், 358 ஆம் இலக்கமிடப்பட்ட என்புத் தொகுதியின் நெஞ்சுப் பகுதியில் இருந்து உடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கை வளையல் துண்டுகள், சில ஆணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் என்பனவே சான்றுப் பொருள்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்தச் சான்றுப் பொருள்கள் அனைத்தும் உரிய முறையில் சுத்தம் செய்யப்பட்டு, இலக்கமிடப்பட்டு, வழக்கின் முக்கிய சான்றுகளாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post