வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி உள்ளது: ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

 

செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் சாட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்குச் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் என்ன பதிலைக் கூறப்போகின்றன? என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு - வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்றும் அவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எங்களுடைய தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவுகளை இலங்கை அரசினுடைய ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே வந்திருக்கின்றார்கள். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக் குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகால் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். இதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை. தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, 'ஸ்கேன்' செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து அறிய முடியும். ." - என்றார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post