வரதட்சணைக் கொடுமையின் உச்சம்: 21 கிலோ எடையாக சுருங்கி உயிரிழந்த இளம்பெண்!

 

கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரவு நேரங்களில் குழந்தைகள் அழுகுரல், விபத்து பாதிப்புகள், இதயம் தொடர்பான அவசரங்கள் என பல்வேறு சூழல்கள் அங்கு நிலவும்.

2019 மார்ச் 21ஆம் தேதி இரவு, அந்த மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஆட்டோ டிரைவர், “சார், பக்கத்து வீட்டுப் பெண் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்று கதறினார்.

உடனடியாக அந்தப் பெண்ணை எமர்ஜென்சிக்கு கொண்டு சென்ற டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவரது பெயர் துசாரா. வயது 28. ஆனால் அவரது தோற்றம் வேறு கதையைச் சொன்னது.

முடி உதிர்ந்து, எலும்பும் தோலுமாக மெல்லிய உடலுடன் இருந்தார். பல்ஸ் சரிபார்த்தபோது எந்த அறிகுறியும் இல்லை. சிபிஆர் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.

ஒரு 28 வயது இளம்பெண் இப்படி எலும்பும் தோலுமாக இருப்பது டாக்டர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சராசரியாக 50 கிலோ இருக்க வேண்டிய உடல் எடை வெறும் 21.8 கிலோவாக இருந்தது.

உயரம் 153 செ.மீ. இது இயற்கையான மரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று குழப்பம் எழுந்தது. உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துசாரா, கொல்லம் மாவட்டம் கரு நாகப்பள்ளியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் விஜயலட்சுமி மற்றும் துளசிதரன். ஒரு சிறிய வியாபாரம் செய்து வாழ்ந்த நடுத்தரக் குடும்பம். துசாராவுக்கு ஒரு தம்பியும் இருந்தார்.

பெண்ணின் திருமணத்துக்காக வரன் தேடியபோது, அதே மாவட்டம் கஞ்சாவேலியைச் சேர்ந்த கீதாலால் என்ற புரோக்கர் மூலம் சந்துலால் என்ற இளைஞரின் தரப்பு வந்தது.

முதல் சந்திப்பிலேயே சந்துலாலுக்கு துசாரா பிடித்துப் போனார். வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கீதாலால் உறுதியளித்ததால், குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.நிச்சயதார்த்தம் முடிந்தது.

ஆனால், நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு கீதாலால் திடீரென 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கோரினார். மூன்று வருட கால அவகாசம் கொடுத்து, தவறினால் 5 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுக்கும் அக்ரிமெண்ட் ஒன்றும் எழுதி வாங்கப்பட்டது. 2013 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது.

முதல் மூன்று மாதங்கள் இனிமையாக இருந்தன. பின்னர் துசாராவின் உறவினர்கள் வீட்டுக்கு வருவதை சந்துலால் தடை செய்தார். துசாராவின் போனைப் பறித்தார். குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. பின்னர் அவர்கள் ஓயூர் என்ற இடத்துக்கு இடம் மாறினர்.

துசாரா இரண்டு முறை கர்ப்பமானபோதும், பெற்றோருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. முதல் பிரசவத்தின்போது குழந்தையைப் பார்க்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.

இரண்டாவது குழந்தை பிறந்தபோது தகவலே தெரியாது. துசாரா தனது பெற்றோரிடம் அழுது, “நகை மற்றும் பணத்தை விரைவில் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறியிருந்தார்.

வீட்டுக்குள் துசாரா அடைக்கப்பட்ட நிலை உருவானது. அருகிலிருந்த லின்சி என்ற அண்டைவீட்டுப் பெண், சுவரில் உள்ள சிறு துளையின் வழியே பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். துசாராவின் தலை மொட்டையாக்கப்பட்டிருந்தது.

உடல் மெல்லிய நைட்டியில் எலும்பும் தோலுமாக இருந்தது. உணவும் தண்ணீரும் தூரத்தில் வைத்து தூண்டப்பட்டு, கொடுக்கப்படாமல் சித்திரவதை செய்யப்பட்டதை லின்சி பார்த்திருந்தார். அண்டைவீட்டினர் சண்டை சத்தத்தை அடிக்கடி கேட்டதாகவும் தெரிவித்தனர்.

2019 மார்ச் 21ஆம் தேதி, ஆட்டோ டிரைவர் மூலம் துசாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்திருந்தார். பிரேதப் பரிசோதனையில் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வயிறு காலியாக இருந்தது. சிறுநீர் பை வறண்டிருந்தது. உடல் எடை 21 கிலோ. இடுப்பு, தொடை, மார்பு அளவுகள் கணிசமாகக் குறைந்திருந்தன. மால்நியூட்ரிஷன் மற்றும் ஸ்டார்வேஷன் காரணமாக மரணம் ஏற்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.

போலீஸ் விசாரணையில் அக்ரிமெண்ட், பெற்றோரின் புகார், பள்ளி ஆசிரியர் சாட்சி (முதல் குழந்தையின் பதிவில் கீதாலாலின் பெயர் அம்மாவாக இருந்தது), லின்சியின் சாட்சி ஆகியவை முக்கிய ஆதாரங்களாகின. சந்துலால், கீதாலால் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

2025ஆம் ஆண்டு கொல்லம் செஷன் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது. சந்துலால் மற்றும் கீதாலால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

துசாராவின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது. இரு குழந்தைகளின் பொறுப்பு துசாராவின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வரதட்சணை, குடும்ப வன்முறை, உணவு மறுப்பு, உடல் மற்றும் மனரீதியான கொடுமைகள் அனைத்தும் கடுமையான குற்றங்கள். குடும்பத்தில் யாரேனும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டாலோ அல்லது வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டாலோ, அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை, ஒரு உயிரைக் காப்பாற்றும்.