கனடாவில் இலங்கையரின் மோசமான செயல்: பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்

 

கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருள்களை வைத்திருந்தமையுடன், அவற்றை பயன்படுத்தினார் என கூறப்படும் குற்றச்சாட்டில் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொராண்டோ பொலிஸின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன என கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என பொலிஸ்  தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிறுவர் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருள்களை வைத்திருந்தமை, அவற்றை அணுகி பயன்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எனினும், மருத்துவராக அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்புடைய எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என டொராண்டோ பொலிஸ் தெரிவித்துள்ளது.

விசாரணை தொடங்கிய தகவல் கிடைத்த உடனேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.