யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகத்துறைப் பேராளுமையுமான ஆறுமுகம் சபேஸ்வரன் (வயது 47) நேற்று புதன்கிழமை இரவு கனடாவில் காலமானார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'யாழ். தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான சபேஸ்வரன், யுத்த காலத்தில் பல்வேறு கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பல சர்வதேச ஊடகங்களுக்கும் இங்கிருந்து பணியாற்றினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், சில வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார்.
தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைக் குரலாகவும் அவர்களின் போராட்டங்களில் முன்னின்று உழைத்தவராகவும் திகழ்கின்றார். அவரது உன்னதமான சேவைகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடங்களாக நிலைத்திருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் 'முரசு' குழுமம் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
