மனைவியின் கொலைக்கு பழிவாங்க முயன்ற கணவர்: கூலிப்படை சதியை முறியடித்த பொலிஸ்!

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த 50 வயது பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி (45) 2025 நவம்பர் 6-ஆம் தேதி ஆவுடைபொய்கை அருகே தைல மரக் காட்டுப்பகுதியில் காருக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மகேஸ்வரியின் பணிக்கு அவ்வப்போது ஆக்டிங் ஓட்டுநராக வந்த 30 வயது சசிகுமார் கடைசியாக அவரை அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாயின.

ஆரம்பத்தில் சசிகுமார் அளித்த வாக்குமூலத்தில், மகேஸ்வரி நடத்திவந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் தான் வேறொருவரிடம் பெரிய அளவில் கடன் வாங்கி அவருக்குக் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது நீண்ட நாட்கள் இழுத்தடித்ததாகவும், பணம் கொடுத்தவர் தன்னைத் தொல்லை செய்து வந்த நிலையில் மகேஸ்வரியைத் திட்டமிட்டு உயிரிழக்கச் செய்ததாகவும் கூறினார்.

சம்பவ நாளில் ஆவுடைபொய்கை பகுதியில் வீட்டு மனையைப் பார்ப்பதற்காக மகேஸ்வரியுடன் சென்றதாகவும், அங்கு பணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் முகத்தில் கல்லால் தாக்கி உயிரிழக்கச் செய்ததாகவும், அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள தோட்டக் கிணற்றில் குளித்துவிட்டு தப்பினதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

ஆனால் தொடர் விசாரணையில் போலீசார் வேறு உண்மையைக் கண்டறிந்தனர். மகேஸ்வரி சசிகுமாரிடம் எந்தப் பணமும் வாங்கவில்லை. மாறாக சசிகுமாரே அவ்வப்போது மகேஸ்வரியிடம் பணம் வாங்கி திருப்பித் தராமல் இருந்தார்.

அந்தப் பணத்தை மகேஸ்வரி திரும்பக் கேட்டபோது, நிலத்தை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவரை சரமாரியாக அடித்தும், காரின் கதவுகளால் நசுக்கியும் உயிரிழக்கச் செய்து நகையை எடுத்துக்கொண்டு தப்பினார் என்பது உறுதியானது. இதையடுத்து சசிகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏழு மாதங்கள் கழித்து சசிகுமார் ஜாமினில் வெளியே வந்தார். தனது மனைவியை இழந்த பாண்டிகுமார் பழிவாங்கத் தீர்மானித்து, சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடியும் கூலிப்படைத் தலைவருமான அரவிந்தை அணுகினார். சசிகுமாரை உயிரிழக்கச் செய்தால் ரூ.15 லட்சம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு, முன்பணமாக ரூ.8.50 லட்சம் வழங்கியுள்ளார்.

இதன்படி கடந்த 21-ஆம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராக வந்த சசிகுமாரை நீதிமன்ற வளாகத்திலேயே தீர்த்துக்கட்ட அரவிந்த் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட கும்பல் திட்டம் தீட்டியது. ஆனால் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் அங்கு தாக்க முடியாமல் வெளியேறினர்.

நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சசிகுமார் சென்ற இருசக்கர வாகனத்தை ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர் தளக்காவூர் பெட்ரோல் பங்க் அருகே சசிகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதவிட்டு விபத்து ஏற்படுத்தினர். கீழே விழுந்த சசிகுமாரை அரிவாளுடன் விரட்டி உயிரிழக்கச் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி அவசர எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நாச்சியாபுரம் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தனிப்படை போலீசார் கீரணிப்பட்டி, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சசிகுமாரைத் தொடர்ந்து வந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குட்லக் தனசேகரன் (48), சிவகங்கையைச் சேர்ந்த அபிராகுல் (25) ஆகியோரைக் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அரவிந்த் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட கூலிப்படை இந்த முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் சசிகுமாரை உயிரிழக்கச் செய்ய முடியாத ஆத்திரத்தில் அதே இரவு கீழப்பூங்கொடி பகுதியில் மற்றொரு நபரை அரிவாளால் வெட்டிய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து கொலை சதிக்கு மூளையாகச் செயல்பட்டதாக மகேஸ்வரியின் கணவர் பாண்டிகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படைத் தலைவன் அரவிந்த் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த பாண்டி, மனோஜ், பிரபு உள்ளிட்ட மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கூலிப்படை கும்பல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மனைவியை இழந்த கணவர் ஏழு மாதங்களுக்குப் பிறகு கூலிப்படையை ஏவிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் உயிரிழப்பு குறித்து ஒவ்வொரு நாளும் யோசித்துப் பார்த்த பாண்டிகுமாருக்குள் ஏற்பட்ட பழிவாங்கல் எண்ணத்தை யாரும் குறை சொல்ல முடியாது.

ஆனால் அத்தகைய சூழ்நிலையில் பொறுமை காப்பது மிகப் பெரிய தேவை. பழிவாங்கும் எண்ணம் ஒரு மனிதனை உள்ளே இருந்து அரிக்கும் விஷம் போன்றது. சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து சட்டத்தைத் தன் கையில் எடுப்பது எந்தப் பயனையும் தராது. மாறாக மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும்.

மக்களே, காவல்துறை மற்றும் நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது உங்களுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் இறைவனை நம்புங்கள். எந்த மதமாக இருந்தாலும் அவனுடைய திருவடிகளில் உங்களைச் சமர்ப்பணம் செய்யுங்கள். மனதை அமைதிப்படுத்துங்கள். வாழ்க்கையை அமைதிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்துங்கள்.

உள்ள கொஞ்ச காலத்தை நிம்மதியாக வாழ்வதற்கு இறைவன் நிச்சயம் அருள் புரிவான். இதுதான் நம் முன்னோர்கள் காட்டிய வழி. மனதில் உள்ள வாதத்தை இறைவன் மீது இறக்கி வையுங்கள். அவன் அந்த பாரத்தைத் தாங்கிக் கொள்ளட்டும். நீங்கள் மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள். 

அன்புக்குரிய ஒருவரை இழப்பது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த வேதனையை பழிவாங்கும் எண்ணமாக மாற்றுவது, மேலும் பல உயிர்களையும் குடும்பங்களையும் பாதிக்கும். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு; அதை தனிப்பட்ட முறையில் நிறைவேற்ற முயற்சிப்பது சட்டப்படி குற்றமாகும்.