அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்த சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (ஜூலை 08) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இது குறித்த அடுத்தகட்ட அறிவித்தலுக்காக வழக்கை வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜரான குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து, அதற்காணை கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றில் விபரித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன, விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அது குறித்த இறுதி நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பிறிதொரு திகதியை வழங்குமாறு கோரினார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, இந்த வழக்கிற்கு அடிப்படையாகக் கூறப்படும் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், தனது கட்சிக்காரரான ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து விஜயத்தின் போது, அவருக்கான வாகனங்களை பிரித்தானிய அரசாங்கமே வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பிரித்தானிய அரசு பின்பற்றிய நடைமுறைகள் அடங்கிய உத்தியோகபூர்வ ஆவணத்தை அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வாகன விபரம் குறித்து தனியானதொரு முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவும் அவருடன் வருகை தந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த நீதிமன்ற வருகையை முன்னிட்டு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்கள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு வெளியில் குழுமியிருந்ததோடு, நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)
.jpeg)
.jpeg)