குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த லூர்து குமார் மகள் ரெபேக்கா (24). இவருக்கும் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாகப்பிரகாஷ் (36), என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாகப்பிரகாஷ் ராமேஸ்வரத்தில் பழக்கடை நடத்தி மதுபான பாரில் வேலை செய்து வந்தார். தம்பதியர் ராமேஸ்வரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2), என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ரெபேக்கா கோபித்துக் கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பவானிசாகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். சில தினங்களுக்கு முன்பு வந்த பாகப்பிரகாஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு ரெபேக்கா உன்னுடன் வாழ விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரெபேக்கா தனது குழந்தைகளுடன் பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து பவானிசாகர் வந்த பாகப்பிரகாஷ் மனைவி ரெபேக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு ரெபேக்காவின் தந்தை லூர்துகுமார், தாய் இந்திரகுமாரி, தங்கை தாரணிகா ஆகியோர் இருந்தனர். அப்போது, அங்கு வந்த பாகப்பிரகாஷ் மனைவியை ரமேஸ்வரம் வருமாறு அழைத்தார். ஆனால், ரெபேக்கா மறுத்ததால் பாகப்பிரகாஷ் ரெபேக்காவை கத்தியால் சரமாரியாக குத்தியதில் பரிதாபமாக இறந்தார். பின்னர் தப்பியோட முயன்ற பாகப்பிரகாஷை உறவினர்கள் மடக்கி பிடித்து பவானிசாகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கோவை மத்தி சிறையில் அடைத்தனர்.
குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் கோபம், ஆதிக்க மனப்பான்மை அல்லது உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். குறிப்பாக குடும்ப வன்முறை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றமாகும்.
