தோட்டத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து மரணம்

 

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பூனாகலை மேற்பிரிவு BTN தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய சுப்பையா சத்தியமூர்த்தி (வயது 34) என்பவர் நேற்றைய தினம் பணியின்போது மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், பணியிட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, உயிரிழப்பிற்கு காரணமான சூழ்நிலைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், யாருடைய தவறு அல்லது அலட்சியம் காரணமாக சம்பவம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தொழிலாளர்களால் கோரப்பட்டுள்ளது.

உயிரிழந்த சுப்பையா சத்தியமூர்த்தியின் மறைவுக்கு தொழிலாளர் சமூகத்தினரும் பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.