இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா'வின் மனைவியிடமிருந்து 1,200 இலட்சம் (120 மில்லியன்) ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருணசிங்க ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், சந்தேகநபர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது குறித்த அடுத்த கட்ட நீதிமன்ற விசாரணை தொடர்பான உத்தரவுகளையும் கோட்டை நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
