களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை திருடிய பெண்ணை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர் .
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் கடந்த ஜூன் 6 ஆம் திகதி பெண் ஒருவர் தங்க நகை கொள்வனவு செவதற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய காப்பு ஒன்றை மிகவும் சூட்சுமமான முறையில் அப்பெண் திருடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேற்படி நகைக் கடை உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று வெள்ளிக் கிழமை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் முன்னால் வைத்து மேற்படி பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து தங்க காப்பு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும், தங்க நகையையும் நீதிமன்னில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போதும், தூரப் பிரதேசங்களிலிருந்து வரும் நபர்களிடம் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடும்போதும், வியாபாரிகளும், இப்பகுதி பொதுமக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரெத்ன வேண்டுகோள் விடுக்கின்றார்.
.jpeg)