நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று (08) மீண்டும் சிறிய அளவிலான மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்று, வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, கைதிகள் சிலர் தமது சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்குள் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தின் போதே பெண் கைதிகள் சிலர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த மோதல்களின் போது உயிரிழந்த கைதிகளின் மரண விசாரணை முடிவுகள் திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாகவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மரண விசாரணை அறிக்கைகள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கைதிகளின் உறவினர்கள் நேற்று சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு சிறைச்சாலை அதிகாரிகளும் காவல்துறையினரும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
