யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளமையுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55 பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
