16 வயதுக்குட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

 

மெட்ரோ வான்கூவர் பகுதிகளில் மின் - ஸ்கூட்டர் விபத்துக்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, வான்கூவர் காவல்துறை போக்குவரத்துப் பிரிவு மின் - ஸ்கூட்டர்களுக்கான சட்டபூர்வமான விதிகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடந்த விபத்தில், தலைக்கவசம் அணியாமல் மின் - ஸ்கூட்டர் ஓட்டிய 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், 54 வயது பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த இரண்டு விபத்துக்களிலும் தலைக்கவசம் அணிந்திருந்தால் பாதிப்புகள் குறைந்திருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வான்கூவர் நகரத்தில் மின் - ஸ்கூட்டர்களுக்கான சில குறிப்பிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மோட்டார் திறன் 500 வாட்ஸ் மிகாமல் இருக்க வேண்டும், எடை 40 கிலோவிற்குள் இருக்க வேண்டும் மற்றும் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இதில் அமரும் வசதியோ அல்லது பெடல்களோ இருக்கக் கூடாது. மணி அல்லது ஹோர்ன், போதுமான பிரேக்குகள் மற்றும் இரவு நேர விளக்குகள் இருப்பது அவசியம். நடைபாதைகள் மற்றும் குறுக்கு வழிகளில் மின்-ஸ்கூட்டர்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து நிபுணர்கள் கூறுகையில், மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்டவர்களை மின் - ஸ்கூட்டர் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். டயர் அழுத்தம் குறைவது, பிரேக்குகள் தேய்மானம் அடைவது மற்றும் பட்டரி பாதிப்புகள் ஆகியவை மின்-ஸ்கூட்டர்களில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளாகும். மின் - ஸ்கூட்டர்களை வெறும் பொம்மையாகக் கருதாமல், ஒரு சாலை வாகனமாக மதித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.